/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, July 23, 2006

ஹைகூ-கதம்பம்.

வரவிற்காய் ஏங்குகின்றார்
வந்தால் ஏசுகின்றார்
சோகத்தில் மழை.

வளர்ந்தால் நிழல்
மடிந்தால் விறகு
மரம்.

ஓடிக்கொண்டே இருக்கின்றான்
கழைப்பறிய மாட்டானோ?
கடிகாரம்.

ஆற்றுவிக்கப்பட்ட பின்னும்
பீனிக்ஸாய் வருவதேன்?
பசி.

நகரும் உயிர்ச்சக்கரம்
தகர்க்கும் ஒற்றன்
மரணம்.

சமுதாயச் சந்தையில்
அவனுக்கும் அவளுக்குமான பண்டமாற்று
திருமணம்.

இன்று வீழ்ந்தால்
நாளை எழுவான்
சூரியன்.

எழுவதற்காகவே
வீழ்கின்றதோ?!...
அலை.

கரையேரத்துடித்த அலையின்
ஆவேச முயற்சியோ?!...
சுனாமி.

Friday, July 21, 2006

சராசரி இந்தியன்

கவனக்குறைவாய்
நடந்து சென்று
கல்லில் மோதி விழுந்து விட்டு
கல் தடுக்கி விட்டது என்பேன்.

காசு வாங்கி
வாக்கை விற்று விட்ட பின்னர்
அரசியல் வாதி
சரியில்லை என்பேன்.

செய்வதெல்லாம்
தவறுதலாய் செய்து விட்டு
நடப்பதெல்லாம் தப்புத்தப்பாய் நடக்கிறதென்று
விதியை நொந்து கொள்வேன்.

வீதியில் கிடக்கும்
முள் விலக்காது-என்
கால் குத்தும் நேரத்தில்
அடுத்தவர் மேல் சாடி நிற்பேன்.

என் விட்டு எச்சிலையை
வீதியில் வீசிவிட்டு
வீதியெல்லாம் அசுத்தம்-இங்கே
யாருமே சுத்தமில்லை என்பேன்.

நடுவீதியில் நின்று
நட்ட நடு நிசியிலும் ஆர்ப்பரித்து விட்டு
பேசக்கூட-இங்கே
சுதந்திரமில்லை என்பேன்.

வரிசை மீறி முன் செல்ல
கேட்காத போதும்
காசை திணித்துவிட்டு
எங்கும் லஞ்சம் என்பேன்.

கடமை செய்யாது
சோம்பி இருந்துவிட்டு-இங்கே
யாருமே ஒழுங்காய்
எதுவுமே செய்வதில்லை என்பேன்.

நான்
சராசரி இந்தியன்.

Tuesday, July 11, 2006

பேய்களின் வெறியாட்டம்.

என்ன சொல்வேன்?
என்ன செய்வேன-என்
நெஞ்சே
என்ன செய்வேன்?.

எத்தனை சிதைவு
எத்தனை அழிவு
சிதறித்தெரித்த இரத்தச் சிதரலில்
எத்தனை சகோதரிகளின்
நெற்றிப் பொட்டுக்கள்.

இரத்த வெறிபிடித்த
ஓநாய்களின் குதறலில்-சிதைந்தது
எத்தனை மலர்கள்.

சிதைந்த உடல்கள்
சிந்தி உரைந்த இரத்தத்துளிகள்
சிதறுண்ட எலும்புகள்.

ஏ ஓநாய்களே!
தணிந்ததா உங்களின் தாகம்.
உம்மை ஈன்றவள்
தாயா?! பேயா?!
உமக்கு
முலைப்பாலூட்டினாளா?!
கொலைவெறியூ்டினாளா?!

பதினொரு மணித்துளிக்குள்
பலநூறு உயிர் குடித்த
உன் வெறியாட்டம் எப்போதடங்கும்.

மதங்கள் உதித்தது
மனங்களை மலர்விக்க
யாருனக்கு கற்றுத்தந்தது
உயிர்களை உதிர்விக்க.

சாத்தான்களே!
இரத்த வெறிபிடித்த ஓநாய்களே!!
சங்கொலி கேட்கின்றது.
இது
மரித்துப் போன-என்
சகோதர சகோதரிகளுக்காக எழுப்பப்படும்
இறுதி அஞ்சலி மட்டுமல்ல.
உங்களின்
வேரறுக்க எழுப்பும்-முதல்
எச்சரிக்கை.

மரம்.

நான்
இலைகள்
முதிர்ந்து உதிர்க்கும் போது
உரமாவேன்

கிளைகள்
காய்ந்து உலரும் போது
விறகாவேன்.

எனை நீ
மண்ணோடு மண்ணாக
சாய்க்கும் போதும்
உன் வீட்டில்
அழகு சேர்க்கும்
மரப்பொருளாவேன்.

மனிதா!
நீ எதற்காவாய்?!!
--------------------------------------------------------------------------------------------
இன்று மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது தங்க நாற்கர சாலை பணிக்காக வெட்டப்பட்டு வானம் பார்த்து கிடந்த காய்ந்த மரங்களை பார்த்த போது எழுதத்தூண்டியது.

Sunday, July 09, 2006

ஹைகூ...ஐம்புலன்

உடலெங்கும் சிலிர்க்கிறது
பனியாய் – அவள்
பார்வை.

காதில் சிற்றோடையின்
இனிய சலசலப்பு – அவள்
பேச்சு.

மனதெல்லாம் பூவாசம்
காற்றில் கலந்து – அவள்
வாசம்.

தேகமெங்கும் பூவின் மலர்ச்சி
என் மீது – அவள்
தீண்டல்.

காதலுலகின் கதவு திறந்தது
அவள் தந்த
முதல் முத்தம்.

நீ பெண்ணாய் இருப்பதால்...

நீ
உப்பாய் இருந்தால்
நான்
உவர்ப்பாய்.

நீ
பாக்காய் இருந்தால்
நான்
துவர்ப்பாய்.

நீ
வேம்பாய் இருந்தால்
நான்
கசப்பாய்.

நீ
மிளகாய் இருந்தால்
நான்
காரமாய்.

நீ
கனியாய் இருந்தால்
நான்
இனிப்பாய்.

நீ
தேனாய் இருந்தால்.
நான்
தித்திப்பாய்.


நீ...
பெண்ணாய் இருப்பதால்
நான்
காதலனாய்.

Saturday, July 08, 2006

ஆசை

நீ
மரமாய் இருந்தால்
காற்றாய்
உனை தழுவ ஆசை.

நீ
கடலாய் இருந்தால்
மீனாய்
உன்னில் நீந்த ஆசை.


நீ
இரவு வானமானால்
விண்மீனாய்
உன் தேகம் தழுவி கண்சிமிட்ட ஆசை.

நீ
பூமியாய் இருந்தால்
மழைத்துளியாய்
உன் மடியில் புரள ஆசை.

உயிரே!...
நீ
பெண்ணாக இருப்பதால்
கேட்கின்றேன்,
உன் வாழ்க்கைத்துணையாய்
வரலாமா?

-----------------------------------------------------------------------------------------------
13.08.2003 ல் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி என்னும் ஊரில் வைத்து எழுதியது.
-----------------------------------------------------------------------------------------------

காதலை சுவாசிக்க...

நீ
நடந்தாய்.
நான்
நாட்டியத்தைக் கற்றுக்கொண்டேன்.

நீ
பேசினாய்.
நான்
பாடக் கற்றுக்கொண்டேன்.

நீ
அழுதாய்.
நான்
சோகத்தின் வலி உணர்ந்தேன்.

நீ
பசித்திருந்தாய்.
நான்
ஏழைகளின் துயர் உணர்ந்தேன்.

நீ
கண்ணசைத்தாய்.
நான்
கவிதையை கற்றுணர்ந்தேன்.

நீ
எப்போது
எனை நேசிப்பாய்.
நான்
காதலை சுவாசிக்க.
---------------------------------------------------------------------------------------------
13.08.2003 ல் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி என்னும் ஊரில் வைத்து எழுதியது.
---------------------------------------------------------------------------------------------