/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Saturday, October 28, 2006

அ, ஆ...கவிதை...7 (மனைவி)

அவள் பிறப்பு வேறிடம்
ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு
இனிய காதலில் மலர்ந்தாள்
ஈடில்லா இல்லரத்தில் கலந்தாள்
உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்
ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்
என்விருப்பம் தனதாக ஏற்றாள்
ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்
ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்
ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்
ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்
ஔவியம் பேசல் தவிர்த்தாள்
இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.
ஃஃஃ

Friday, October 27, 2006

அ, ஆ...கவிதை...6 (அப்பா)

அறிவின் திறவு கோல்
ஆற்றலின் ஆரம்ப ஊற்று
இடர்களைய கற்பித்த ஆசான்
ஈடில்லா தலை மகன்
உறுதியாய் நமைநிறுத்திய ஆணிவேர்
ஊக்கம் தந்த முதுகெலும்பு
எப்போதும் நலம் விரும்பி - நம்
ஏற்றமே அவர் கனவு
ஐக்கியமாகிவிடு அவர் நினைவில்
ஒருபோதும் அவர்சொல் மறவாதிருந்தால்
ஓடிடச் செய்திடலாம் தீவினைகள்
ஔவியம் தவிர்த்திடலாம்
இஃது உலகியல் பழகிடலாம்.
ஃஃஃ

Thursday, October 26, 2006

அ, ஆ...கவிதை...5 (அம்மா)

அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.
ஃஃஃ

Monday, October 23, 2006

அ..ஆ..கவிதை..4(தமிழ்ப்பெண்.)

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்சொல்லே அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.
ஃஃஃ

Thursday, October 19, 2006

அ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)

அரக்கன் உயிர்பறிக்க - அந்நாளில்
ஆண்டவன் உதித்துவந்தான்
இறுதியில் வதைத்து அழித்திட்டான்
ஈடில்லா தீபாவளித்திருநாளை நமக்களித்திட்டான்
உலகினிலின்று ஆயிரம் கொடுமை
ஊர்தோறும் ஜாதியே தலைமை
என்றுதான் மாறும் இந்நிலைமை
ஏங்கித்தவித்தும் பதிலோ வெறுமை
ஐயத்தோடே கழிகிறதென் கிழமை
ஒழிவதென்றோ மக்களின் மடமை
ஓங்கியுரைப்பேனன்று தீபாவளி பெருமை
அஃதுவரை எதிர்த்துநிற்பேன் சிறுமை.
ஃஃஃ

அ..ஆ..கவிதை - 3 (நீதி நெறி)

அன்பு பெருக்கு
ஆசை சுருக்கு
இன்னல் ஒடுக்கு
ஈகை பெருக்கு
உழைத்து வாழ்
ஊழ்விழை நீக்கு
எழிமை பேண்
ஏமாற்றம் தவிர்
ஐயம் அகற்று
ஒற்றுமை வளர்
ஓர்குலம் என்றாக்கு
ஔவை போற்று
அஃதே நன்று.
ஃஃஃ

அ..ஆ..கவிதை..2 (நட்பு)

அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.
ஃஃஃ

Wednesday, October 18, 2006

அ..ஆ..கவிதை - 1

அடடா அடடா அருமை
ஆண்டவன் படைத்தான் நம்மை
இயன்றவரை வளர்த்துவிடு திறமை
ஈசலாய் மாய்வது சிறுமை
உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை
ஊழ்வினை செய்வதா வறுமை
எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை
ஏற்றம்பெரும் உங்கள் நிலைமை
ஐயமின்றி போற்றிவிடு பெண்மை
ஒருநாளும் பொருத்திடாதே மடமை
ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை
ஔவையாரோ தமிழுக்கு பெருமை
ஃ தமிழின் தனித்தன்மை.
ஃஃஃ

Sunday, October 01, 2006

கவிதை! காதல்!! கடமை.!!!

கவிதை உள்ளம் கணலாகும்
காதல் உள்ளம் பனியாகும் – என்
கடமை உள்ளம் கல்லாகும்.

பெருளுக்கு சொல் தேடுமோ
பணிவு கொண்டு துதிபாடுமோ – கவி
பணியென்றே கொடுமைக்கு குழிதோண்டுமே.

வார்த்தைத்தேடி ஓடல் கவிக்கழகாமோ?
வேர்க்கும் உடலெல்லாம் உழைக்குமுடலாமோ – உள்ளத்தின்
வார்ப்புக்களே உண்மை கவியாகும்.

காதலும் வீரமும் கவிக்கருவாகும்
காதலோ கண்ணியத்தில் உருவாகும் – பெருகும்
காதலோ கவியால் தெளிவாகும்.

கண்டதனால் வந்திடுமோ காதல்
கண்மோகத்தால் வருவதுமா காதல் – நெஞ்சத்தின்
கண்வந்திடுமே உயிரன்பால் அதுகாதல்.

மோகத்தில் பித்தராய்ப்பிதற்றி பாட்டெழுதி
வேகத்தில் முடிந்துபோகும் அதுவோகாதல் – இத்
தேகமழிந்தாலும் அழியாது அதுகாதல்.

காதலித்தாள் கைவிட்டோட, உள்ளம்
பேதலித்து தூற்றுவதோ காதல் – தன்
வேதனை மறந்தவளை வாழ்த்துவதேகாதல்.

மேனி பளபளக்கும் உடல்வளம்
நாணாமல் பார்ப்பதுவோ காதல் – உடல்மேவாமல்
கனியுள்ளம் காண்பதுவே காதல்.

கண்ணடித்து பெண்ணொருத்தியை அழைத்து
கட்டிலுக்கு இழுப்பதுவோ காதல் – கண்ணொளியை
கவர்ந்திழுக்கும் பனியுள்ளம் காதல்.

காதற்களம் விளை நிலமாயின்
கடமையும் வீரமும் விளைச்சலாகும் – மனதிற்கு
காதலும் ஒரு கடமைதானோ?!...

மூர்க்கத்தில் கொடுமைசெய்யும் மூடரை
முறையென்று விடுவதோ கடமை – தவறாமல்
மூட்டெலும்பை உடைப்பதுவே கடமை.

தவறுசெய்தவன் தம்பியென்று நெறியின்றி
தப்பிக்க வழிசெய்வதோ காதல் – நேர்நின்று
தண்டிக்க வழிசெய்வதே கடமை.

பணப்பைக்கும் பஞ்சணைக்கும் உறவுகூறி
கனவானின் கால்பிடிப்பதோ கடமை – நிலை
குன்றிப்போனாலும் நெறியோடிருப்பதுவே கடமை.

உறவோர்க்கு கனியாக; அல்லாத
பிறவோர்க்கு கசப்பாக இருப்பதுவோகடமை – எல்லோர்க்கும் மாறாதக்கல்லாய் இருப்பதுவே கடமை.

தமிழ் நெஞ்சில் ஊறவேண்டும்
தமிழ்கவிதை காதல் கடமை – இனி
அகிலமெல்லாம் புகழவேண்டும் நம்மை.


ஃஃஃ
எழுதிய நாள் : 24.09.1989.
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ