/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Friday, March 30, 2007

கிரகணம் - (பாகம்-6)

பாகம் – 6.

ஐயப்பாடுகளுக்குள் தான்
ஐக்கியமாகிக் கொள்கின்றோம்
அநேக நேரங்களில்...

தயக்கக் கூண்டுக்குள் தான்
தவித்துக் கொண்டிருக்கிறோம் - நல்ல
தருணங்களை தவறவிட்டு விட்டு...

சோம்பலின் போர்வைக்குள் தான்
குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம்
உற்சாக ஒளியை இழந்துகொண்டு...

மக்கள் வெள்ளத்தில்
நீந்திக் கரைசேர முயலும்
என் சிந்தை கவர்ந்த
சுந்தரச் செல்வியை
எட்டிவிட எண்ணி சிட்டாய் ஏகினேன்
அவள் பட்டுப்பாதம் தொட்டுக் கடந்த திசையில்...

தூரங்களை நான் கடந்த பின்னும்
இருவருக்கும் இடையேயான
தூரம் தான் குறைந்த பாடில்லை...
காட்டு வெள்ளத்தில்
எதிர் நீச்சல் போடும்
சிறு எறும்பு போலதான் என் நிலையும்...
தொடங்கிய இடத்திற்கேத்தான்
தள்ளப்படுகின்றேன் மக்கள் வெள்ளத்தால்!...

ரோஜா மலர் வேண்டுமாயின்
முட்களின் தீண்டலை தாங்கத்தான் வேண்டும்...
மலைத்தேனை ருசிக்க வேண்டுமாயின்
தேனீக்களின் கொடுக்குகளை சமாளிக்கத்தெரிய வேண்டும்...
நிழலின் அருமை தெரிவதற்கு
வெயிலின் வெம்மை உணர்ந்திருத்தல் வேண்டும்...
காதலை நுகர்வதற்கும்
காத்திருப்பும் முடிவுறா முயற்சியும் வேண்டும்...

தூரத்தில் இருக்கும் போது
தெரியாத பதற்றமும் பரவசமும்
பல காலம் பார்க்காத
ஊரை நெருங்க நெருங்க பற்றிக்கொள்ளும்...
என் நிலையும் அது தான்...
என் பிரிய சகியை நெருங்க நெருங்க...
பதற்ற நெருப்பு என்னிலும் பற்றிக்கொண்டது...
பரவசக்குளிரில் உள்ளம் குதூகலித்தது...

உற்சாகத்தின் விளிம்பில் நின்று
மயிர்க்கால்கள் கூட நர்த்தனம் ஆடி
பரவசத்தின் எல்லையை பறைசாற்றுகின்றது...

கைகள் தொடும் தூரத்தில்
காரிகையை நெருங்கிவிட்டேன்...
இருவரின் உள்ளங்களின்
தொலைவை எங்கனம் அறிவேன்?!...

எப்போதுமே திறந்த புத்தகங்கள் தான்
கடலும் காதலும்...
மூச்சையடக்கத்தெரியாதவன் கடலையும்
உணர்வுகளை மதிக்கத்தெரியாதவன் காதலையும்
மர்மம் என்கின்றான்...
மூச்சையடக்கி மூழ்கிப்பழகினால்
முத்தெடுக்கலாம் கடலில்...
உணர்வுகளில் புரிதலை வளர்த்துக்கொண்டால்
காதலிக்கும் தகுதிபெறலாம் உலகில்...


உணர்வுகளைப் புரிதல்
சாத்தியமென்றே நினைக்கின்றேன்...
காதலும் சாத்தியம் தான் அதனால்...
ஏந்திழை என்னை ஏற்கும் நிலைவரும்...
தூரத்தின் தொலைவோ
கைகளுக் கெட்டும் தொலைவில் தான்...

கணப்பொழுதில்
என் நினைவைக் கலைத்து
நெஞ்சத்தில் குடிகொண்டவளின்
முன்சென்று நின்றேன்...

உணர்வுகளின் ஏக்கத்தையும் தாக்கத்தையும்
வார்த்தைகளில் வடிவாக்கி
வானவில்லாய் வர்ணம் தீட்டி
ஆசைகளை அவளிடம் கூறிவிட
எண்ணம் என்னுள்ளே கொண்டேன்..

என்னன்னவோ செய்தும்
வார்த்தைகள் தான்
வாய்விட்டு வரமருக்கின்றது!...

அத்தனையும் தாண்டி
ஒற்றை வார்த்தையில் அழைத்தேன் அவளை,
‘அம்மணீ...’

பதிலும் வந்தது!...
அவளிடமிருந்தல்ல...
அறுபதைத்தாண்டிய ஒரு
அனுபவப் பழத்திடமிருந்து
‘தம்பீ...என்னவேண்டும்?!...’

அவளின் தாத்தாவாக இருக்குமோ?!...
ஃஃஃ
………………………………………………………………… (வளரும்....)