/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, February 15, 2007

கிரகணம் - (பாகம்-1)

(இது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.)


பாகம்-1

கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி
கணநேரம் கழித்திருக்க...
வையகம்
தன்மேல் கருப்பு போர்வை
போர்த்திக்கொண்டது...

வானம்
சாபம் பெற்ற இந்திரனாய்
சாமந்திப் பூ தோட்டமதாய்
தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து
மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது...

தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில்
நறுமணம் கலந்தது
மெல்ல மொட்டவிழந்த முல்லை...

பகலெல்லாம்
சூரிய ஆண்தனை காண
நாணம் பூண்டு மறைந்திருந்த
நிலவுப் பெண்ணாள்
மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்...

தோகையவள் எழில் கூட்ட
தோழியராய் தேகம் தொட்டே
தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள்.

விண்ணகத்து பெண்ணிவளின்
அழகெல்லாம் நாணிநிற்க
மண்ணகத்தில் பெண்ணொருத்தி பிறந்திப்பாளா?
பிறந்திருந்தால் நம் கண்ணுக்கு காணக்கிடைப்பாளா?
வாலிப நெஞ்சத்தின் தாக்கத்தால்
மூளையின் ஒருசெல்லில் எழுந்த வினாகூட
இனிமை தந்தது...

ஆற்று மணல் மேட்டில்
கூடிட்ட கூட்டத்தில் ஐக்கியமானேன்...
இன்று சந்திரகிரகணமாம்...
பார்க்கும் ஆசை
எனக்கும் இருந்தது
சந்திரகிரகணத்தை அல்ல...
கூடும் சந்திரவதனங்களை!...
இளமையின் ஈர்ப்பல்லவா?...
நான் மட்டும் விதிவிலக்கா!...

நல் பவுர்ணமி நாளில்
சந்திரனில் படும் சூரியனின் ஒளிதனை
பூமியது சிறிது நேரம் மறைத்திட
நிலவும் ஒளியின்றி மறைந்திடும் நிகழ்வு
சந்திரகிரகணம்...
இது நான் பள்ளியதில் படித்திட்ட பாடம்.

இங்கோ..ஆற்று மணல் மேட்டில்
மேவிநின்ற கூட்டத்தார் உரைத்திட்டார்
நிலாதனை இராகு வந்து விழிங்கிட
சந்திரகிரகணம் நிகழுமென்று.

மறுத்து நான்
பள்ளிப்பாடமதில் கற்றதை உரைத்திடவே
கைகொட்டி சிரிக்கின்றார்...
ஏழனமாய் எனை பார்க்கின்றார்...
தன்கருத்து உண்மையென்று புகல
முன்னவனை துணைக்களைக்கின்றார்...
பலமாக புத்தியின்றி புலம்புகின்றார்...

மாந்தர்காள்!
மந்தைவெளி மாடல்ல..
செம்மரி ஆடுமல்ல நாம்...
முன்னவர் சாய்ந்த வழி சாய்வதற்கு...
தெய்வப்புலவன் வள்ளுவனே செப்பிவிட்டான்
எவர் கூற்றென்றாலும் ஆய்ந்தறிவதே அறிவென்று...
ஆதலின் உண்மை உணருங்கள் என்று
அவர் பார்த்து உரைத்திட்டேன்...
ஆயினும் பெரியவர் ஒருவர்
எனை பார்த்து முறைத்திட்டார்.

அனைவரும் திரும்பிட்டார்
இருகை சேரும் ஓசைகேட்டு...
யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரர்
நானும் காண ஏங்கிட்டேன்...

ஓசைகேட்ட திசையிலிருந்து
தென்றல் மல்லி வாசம் சுமந்து வந்தது
உணர்ந்து கொண்டேன்,
யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரி...
யானை வரும் முன்னே
மணிவோசை வரும் பின்னே என்பதுபோல்
மங்கையவள் வரும்முன்னே
மல்லி மணம் கமழ்ந்ததுவோ?...

சந்திரகிரகணத்தால் எங்கும் இருள் சூழ...
எம்முன் ஒளிபரவிற்று.
சற்றுமுன் வானில் பார்த்த மதி
எம்முன் பெண்ணுருவாய்...
அட, எப்படிச்சாத்தியம் இது?...
இவள் மண்ணில் தோன்றிய நிலா...
விண்ணிலாவை விஞ்சிய பெண்ணிலா...
இவள் வரவு கண்டே
வான் நிலா மறைந்ததோ?...

என் கருத்திற்கு ஒத்து
கையொலி செய்த நங்கை இவளா?...
நிலைகொள்ளவில்லை மனம்.

காணக்கிடைப்பாளா என்று
எண்ணிய சற்று நேரத்தில்
என் முன்னே நிலவை விஞ்சிய இவள்...
இயற்கையின் அற்புதங்களில் இவளும் ஒன்றோ?!...

ஃஃஃ(வளரும்...)

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home