/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, February 19, 2007

கிரகணம் - (பாகம்-3)

பாகம் -3.

பற்றற்ற மனிதர்
யார் உளர் உலகில்?...
பற்றற்றதாய் கூறும் ஞானியரும்
பற்றியே நிற்பர் இறையடி...

பொருள் மீது...
உயிர்கள் மீது...
நியாயமாகக் கொள்ளும் பற்றை
ஆசை என்போம்...
முறையின்றிக் கொள்ளும் பற்றை
பேராசை என்போம்...

எதிர்பார்ப்பின்றி எல்லா
மனிதர் மீதும் கொள்ளும் பற்றை
மனிதாபிமானம் என்போம்...

சொந்தம் பார்த்து
பந்தம் கொள்ளும் பற்றை
பாசம் என்போம்...

ஆணிடத்து பெண்ணும்
பெண்ணிடத்து ஆணும்
உயிர்வைத்து கொள்ளும் பற்றை
காதல் என்போம்...

பெண்ணிவளிடத்து
நான் வைத்த பற்று
காதலென்று கொள்ளல் தகுமோ?!...

புரிந்துணர்ந்து அறிந்த பின்னே
வருவது மட்டுமல்ல காதல்...
பேசிக்கழித்து சிரித்த பின்னே
வருவது மட்டுமல்ல காதல்...
பார்த்த கணத்திலேயும் வரலாம் காதல்...

காதல் ஒரு நோய்...
காதல் ஒருவித பசி...

நோய்வராத உடலுமில்லை...
பசி உணராத வயிருமில்லை...

மூன்றுமே நேரம் குறித்து
சொல்லிவிட்டு வருவதில்லை...
எந்த கணத்திலும் நிகழலாம்...

பார்த்த சில கணங்களில்
அவள் மீது கொண்ட பற்றும்
காதல் என்றே கொண்டேன்...

காதலுக்கு இரு முகங்கள் உண்டா?!...
உண்மைக் காதலுக்கு
எப்போதுமே ஓரே முகம் தான்
அன்பு முகம்.

அது..
நாம் காதலித்தவர்
நம்மை காதலித்தாலும் வெறுத்தாலும்
பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமதாய்
மாறாது நன்மை நினைப்பதே...

மங்கையவள்
என் கண்பார்வையினின்று மறைந்த பின்னும்
எண்ணமதில் நிலைத்தே நின்று வதைத்தாள்
வந்து என்னை பார்பார் என்று...

என் மனப்பறவை
தனக்கான கூடாக
நினைத்ததோ அவளை...
அவள் எத்திசை சென்றிருப்பாளென
ஏங்கிற்று என் மனம்...

கண்களோ எண்திசையும் சுற்றித் தேடியது...
ஏந்திளை எங்கிருப்பாளென்று...

கால்களோ மக்கள் வெள்ளத்தில்
வழி கிடைத்த இடமல்லாம் ஊர்ந்தது...

மீண்டும் காணக்கிடைப்பாளா – என்
காதல் கிளி...

பெயர் கூட கேட்காமல் விட்டுவிட்டேனே?...

மனதிற்குள்ளேயே எழுதி எழுதிப் பார்க்கின்றேன்
அவள் திருப்பெயர் என்னவாய் இருக்குமென்று...
அவள் அழகுக்கு பெயர் தான் கிடைக்கவில்லை...

“நிலா” வாக இருக்குமோ?!...
இல்லை… இல்லை...
அது மாதத்தில் பாதிநாள்
தன் எழில் முகத்தையே இழந்து விடுகின்றது...

“ரோஜா”வாக இருக்குமோ?!...
இல்லை...இல்லை...
அது ஒரு பொழுதுக்குள்ளே
தன் இதழ்களை உதிர்த்து விடுகின்றது...

என்னவாகத்தான் இருக்கும் இவள் பெயர்?...
என்னவாக இருந்தால் தான் என்ன?
பெயரால் அவளுக்கு பெருமையல்ல...
எழில் நிலா அவளால் தான்
அவள் கொண்ட பெயருக்கு பெருமை.

தாயைத் தொலைத்த
குழந்தையதாய் தேடுகின்றேன்...
எங்கே சென்றிருப்பாள்
என் தங்கத் தாரகை...
ஃஃஃ

0 Comments:

Post a Comment

<< Home