/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Friday, February 16, 2007

கிரகணம் - (பாகம்-2)

பாகம்-2.

அருகில் வந்து மெல்ல
முகம் மலர்ந்து நின்றாள்...

காலைக் கதிரொளி கண்டேன்
அவள் நிலா முகத்தில்.
மதியின் தண்மை கண்டேன்
அவள் சூரியக் கண்களில்.
இரவின் வர்ணம் கண்டேன்
அவள் கார் கூந்தலில்.
மூன்றாம்நாள் பிறையை கண்டேன்
அவள் புருவ பீலியில்

பிரம்மன் பலாப்பழத்தின் சுவையில் தித்தித்து
இவளின் இதழாய் வைத்து
சிகப்பு வர்ணம் தீட்டியிருப்பானோ?!...

இவள் வனப்பை இங்கு சொல்ல
வார்த்தைகள் இல்லை...
நல்ல ஆண்மகவுக்கது முறையும் அல்ல...

முல்லையின் நறுமணம் கூட
முத்துப் பெண்ணிவளின் தரிசனம் காணத்தான்
சற்று முன் உலாவந்ததோ...

நிலாப்பெண்ணைத் தொடர்வர்
நட்டத்திரத் தோழிகள் எப்போதும்.
இவளின் தோழியர் எங்கே?!...
இவள் ஒற்றைச் சூரியனோ!...

கைகளிரண்டும் தட்டி
என் கருத்திற்கு ஊக்கம் தந்த நங்கை
அமுதவாய் மலர்ந்து
தேன் தமிழில்
ஒருவார்த்தை பாராட்டிட மாட்டாளா?...
பரிதவிப்பில்,
வானில் நின்று பூமியில் இறைநோக்கும்
பறவையின் இறகுகளாய் படபடத்தது
அடியேன் நெஞ்சம்...
அவளின் இதழ் பார்த்து...

முகில்கள் எப்போதும்
மழையாய் பூமியைச் சேர்வதில்லை...
அலைகள் எப்போதும்
நுரையோடு கரையைத் தொடுவதில்லை...
பூக்கும் பூக்கள் எல்லாம்
கனியாகும் வரை நிலைப்பதில்லை...
மனிதனின் ஆசைகளும் எல்லா
நேரங்களிலும் முழுதாய் நிறைவேறுவதில்லை...

என் எண்ணப்படி அவளும் என்னிடம்
ஒருவார்த்தை கூட பேசவில்லை...

நகரத்தின் வாசனை படாத கிராமம் இது...
கிராமத்தின் நாணமும்...
அறிமுகமில்லா ஆணிடம் என்ன அகவல் என்று
கிராமத்தின் நாகரீகத்தாலும்...
பேசாமல் இருந்திருப்பாளோ?!...

என் எண்ணம் மட்டும்
மலரைச் சுற்றும் பட்டாம் பூச்சியாய்
அவளையே சுற்றிப்பறந்தது...

அவளின் நினைவுகளோ...
என் மன ஏட்டில், அனுமதியின்றியே
தனக்காய் பல பக்கங்களை
பத்திரம் செய்து கொண்டது...

என் விழியும் எண்ணங்களும்
அவளைச் சுற்றியே பறக்க...
அவளின் விழிகளின் பார்வை
வேரெங்கோ பறந்தது...
இறைதேடிவந்த பறவை கூடுதேடி பறப்பது போல...

நியுட்டனின் மூன்றாம் விதி
இங்கும் விளையாடியது...
மின்னலாய் வந்தாள்
புயலாய் மனதைச் சுருட்டினாள்..
மீண்டும் மின்னலாய் திரும்புகின்றாள்...
என் மனதை மட்டும் கலைத்துவிட்டு...

கொள்ளையடித்துச் செல்வது குற்றமாம்...
இந்தியத் தண்டனைச் சட்டம் சொல்கின்றது...
என் மனதை கொள்ளையிட்டுச் செல்கின்றாள்
யார் இவளைத் தண்டிப்பது?!…

ஃஃஃ. (வளரும்...)

0 Comments:

Post a Comment

<< Home