/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, April 02, 2007

கிரகணம் - (பாகம்-7)

பாகம் – 7.

காவலற்ற எதுவும்
பயனுற்று இருத்தல் அரிது..
பயனற்ற எதுவும் காவலோடு இருத்தல் அரிது...

மதிப்பு மிக்கவை மட்டுமே
உலகத்தில் காவலுற்று இருக்கின்றது...

கட்டுக்கோப்பான காவல் தான்
கவலையற்ற வாழ்விற்கு வழிசெய்கின்றது...

காவலுற்ற உலகம் கவலையற்று இருக்கும்
காவலற்ற உலகம் கலக்கத்திலே மிதக்கும்...

தொல்லையில்லை எல்லையிலென்று தெரிந்தால்தான்
தொழில்கள் கூட நாட்டில் செழிக்கும்...

திருட்டுக்கள் நடக்காதென்று
திட்டமாய் தெரிந்தால் தான்
தூக்கம் கூட கண்ணை வந்து தழுவும்...

பயமற்று உணரும் போதுதான்
பசியைக்கூட முழுவதுமாய்
மனம் உணர்தல் கூடும்...

பயம் அத்தனை
சுகத்தையும் அழித்து
துக்கங்களை மட்டுமே பரிசாக்கும்...

பயமற்ற காவலோ
துக்கங்களின் சுவடுகளைக் கூட
சந்தோச வீட்டின் படிக்கட்டுக்களாக்கிவிடும்...

பெரியவர் கூட
என் தங்கத் தாரகைக்கு காவலாய்
வந்தவராய் இருக்குமோ?!...

ஒரு கணம் திகைத்து
மறு கணம் தெளிந்து
கலக்கத்தைத் தவிர்த்து
அப் பழத்திடமே பகர்ந்தேன்
“தாத்தா!, ஆண்களை
அம்மணீ! என்றழைப்பதில்லையே!”

தாத்தாவிற்கு பக்குவம் மட்டுமல்ல
சொற்பதமும் வாய்த்திருக்க வேண்டும்...
சுருக்கென்று வார்த்தைகளாலும்
குத்தும் கலை அறிந்திருக்க வேண்டும்...

அதனால் தான்...
“நாய்களின் குலைப்பெல்லாம்
நன்மதிக்கு கேட்டிருக்க அவசியமில்லை...”
என்றார்...

ஆகா!...
என் தேவதையின் பெயர் நன்மதியா?!...
பொருத்தமான பெயர்தான்...
பெயர்வைத்த வாய்க்கு
சர்க்கரைப் பொங்கலிடலாம் தவறில்லை!...

ஒருவேளை, பெரியவர்,
உவமை கூறி நம்மை சாடியிருக்கலாமோ?!...

இருக்காது...இருக்கக்கூடாது
உவமையாய் இருக்கக்கூடாது...
அந்த முழுமதியின் பெயர்
நன்மதியாகவே இருக்க வேண்டும்...

நன்மதியென்றே அவளின் பெயரை
என்னுள் கருக்கொண்டு
உருக்கொண்டேன்...

காதலின் வேகத்தில்
கட்டுக்களும் காவலும்
கண்களுக்கு தெரிவதேயில்லை...

காதல் எண்ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட
அணையிட்டு தடுத்துவிட முடிவதில்லை...

காதல் மழைக்காலத்து காளான் போன்றது...
காதலுற்றவரைக் கண்டால் - அது
வெளிப்பட்டே தீரும்...

காதல் உள்ளம்
காட்டு வெள்ளம் போல் சக்தி கொண்டது...
அது கட்டுக்களையும் காவலையும் கடந்து
தன் எல்லைகளை தொட்டே ஓடும்...

நல்ல காதலுள்ளம்
இங்கிதமும் அறிந்தது...
பிறர் உள்ளம் கசக்கி
இன்பம் காண துணியாது அது...

என் காதலை
என்னவளிடம் சொல்லியாக வேண்டும்...
தாத்தாவின் மனதையும் புண்படுத்தலாகாது...

என் செய்வேன்...
என் செய்வேன்...
என் இறைவா செப்பாயோ!...

வேலிதாண்டி தோட்டத்துள்
நுழைவதைக்காட்டிலும்
காவல்காரனோடு சமரசம் செய்து
சம்மதத்தோடு நுழைவது சிறப்பல்லவா?!...

தாத்தா நமக்கொன்றும் பகையல்லவே...
சமரசம் செய்து கொள்வதொன்றும் தவறல்லவே...

மெல்ல அருகு சென்று
அன்போடழைத்தேன்
“தாத்தா”...

அனுபவப் பழத்திற்கென்
அழைப்பின் நோக்கம் தெரியாமலா இருக்கும்...
கண்களால் என் உள்ளம் துளாவி
உற்று நோக்கினார்...
“என்ன? சொல்ல வந்ததை சொல்.”…
என்ற அர்த்தமிருக்குமோ?...
அவர் பார்வைக்கு....

நான் அவ்வாறே
அர்த்தம் செய்துகொண்டேன்...

“தாத்தா!,
சற்று நேரத்திற்கு முன்
கிரகணம் பற்றிய
அறிவியல் உண்மைகளை பகர்ந்தேன்...
கூடிநின்ற கூட்டத்தில்
பலர் சிரிக்க, ஏழனமாய்...
இன்னவளோ,
என் கருத்திற்கு கைதட்டி
மற்றோரும் ஏற்கச்செய்தாள்...
இவ் இனியாளுக்கு
என் நன்றி பகர்தல் தகுமன்றோ!...
அதற்கு தங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்” என்றேன்.

அனுபவத்தின் ரேகை படிந்த
தாத்தாவின் முகத்தில்
அமைதி தவழ்ந்தது
வானம் தழுவும் மேகமதாய்...

இனியாளின் பெயர்
அமுதம் ஒத்த நன்மதியென்றே எண்ணி
“நன்மதி மிக்க நன்றி...
தங்களின் கனிவான
கைத்தட்டலுக்கு...
நான் சொன்ன பெயர் சரிதானே?!”, என்றேன்...

ஏந்திழையின் இன்முகம்
ஆயிரம் பூக்களின் மலர்ச்சியாய் ஜொலித்த போதும்...
அமுத வாயினின்றும்
குயிலின் குரலாய்
ஒரு சொல் வாராதோ என்று ஏங்கித்தவித்தேன்...

என் ஏக்கத்திற்கு...
ஏமாற்றம் தான் விடையாய் கிடைத்தது...
காதல் புத்தகத்தில்
ஏமாற்றத்தின் பக்கங்கள் தான் அதிகமோ?!...

இல்லையெனில்...
மௌனத்தின் பொருள்
சம்மதமென்று அர்த்தப்படுத்திக் கொண்டு
காதல் வேள்வியில் உருகும்
நெய்யாக வேண்டுமோ?!...

ஏங்கித்தவித்த மனது
ஆற்றாமையால் கேட்டேவிட்டது...
“கேள்விக்கு ஆறுதலாய்
பதிலொன்று பகரமாட்டீரோ?!...”

இப்போதும்
மதியின் முகத்தில் பூக்களின்
மலர்ச்சியே பூத்துச்சிரித்தது...
புல்லாங்குழலின் இசையாய்
அவளின் இன்சொற்கள்
இதழ்விட்டு பிரியவே இல்லை...
ஒருவேளை அதற்கு மனமில்லையோ?!...
தேன் அதரங்களைவிட்டு அகல்வதற்கு...

குழப்பச் சருகுகள் என்னுள்
சப்தம் செய்து கொண்டிருந்தது...
“ஒரு வேளை,
நான் பேசுவதை
அவள் விரும்பவில்லையோவென்று!...”

என் கற்பனைகளுக்கு
தாழ்ப்பாளிட்டு விட்டு...
என் நெற்றிப்பொட்டில்
வார்த்தைச் சம்மட்டியால் ஓங்கியடித்து
எதார்த்தச் சுவரில் வரட்டியாய்
ஒட்டச் செய்தார் பெரியவர்,
ஒற்றை வார்த்தையில்...

“தம்பீ!...
நன்மதிக்கு பேசவராது!!!…”

வானத்து நட்சத்திரங்கள்
உதிர்ந்து வீழ்ந்து
இருக மூடியது என்னை...
திறந்திருந்த என் கண்களுக்கு
தெரிந்ததெல்லாம் இருள் மட்டும் தான்...
அவள் ஒளிமுகம் தவிர்த்து…

இப்போதும்
பூத்துக் கொண்டுதானிருந்தது பூக்கள்
அவள் முகத்தில் மட்டும்
புன்னகைப் பூக்களாக...

அவள் பூமுகத்தின் வாசம்
என் மனப்பூக்களிலும் பரவியிருக்க வேண்டும்...
இருண்டு தெரிந்ததெல்லாம்
ஒளிப்பூக்களைச் சூடிக்கொண்டது...
என் மனம் போல...

வார்த்தை சொல்லாத காதலை...
அசையும் விழிகளும்
மலரும் பூமுகமும் சொல்லிவிடும்...

பூக்கள் பேசிப்பேசியா நம்மை ஈர்த்தது...
வான்மதி பாட்டுப்பாடியா
தன்னை பார்பார் என்றது?...

நன்மதி மட்டும்
பேசித்தான் தீரவேண்டுமா?!...
கடவுள் கூட வஞ்சனை சொய்து இருக்கலாம்...
காதல் நெஞ்சம் வஞ்சிக்கலாமா?...
அவள் மேல் பிறந்த
என் காதல் ஊற்றின்
நீரோட்டம் குறையவே இல்லை...
மேலும் பொங்கிப் பிரவாகமே செய்தது…

மீண்டும் தாத்தாவின் அருகு சென்று
சத்தமாக சொன்னேன்...
“தாத்தா!
என் பெற்றோருடன் வருகின்றேன்
உங்கள் வீட்டிற்கு”, என்று.

நன்மதி
ஒரவிழியால் பார்த்து இதழோரம்
புன்னகை ஒன்றை பூக்கவிட்டாள்..

அவளின்
ஒற்றைச் சிரிப்பில் ஒழிந்திருந்தது
உலகத்து மொழிகளின்
மொத்த வார்த்தைகளும்!!!....
ஃஃஃ (முற்றும்)

3 Comments:

At 7/3/10 7:33 PM, Blogger Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

 
At 14/4/10 9:43 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
At 14/4/10 9:44 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home