/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Tuesday, September 26, 2006

களவாடுவது சுகமானது?!...

களவாடுவது சுகமானது
உனக்கும் எனக்கும்
நம் அனைவருக்கும்
களவாடுவதென்பது சுகமானது.

எவருமே அறியாமல்
எல்லோருமே களவாடத்தான் செய்கின்றோம்.
ஒப்புக்குச் சப்பாணியாய்
வார்த்தைகளைச் சொல்லி
வளர்ச்சியென்றோ
நாகரீகமென்றோ
திருப்திப்பட்டுக் கொள்கின்றோம்.

களவாடுதலை
கருவிலேயே அரங்கேற்றி வைக்கின்றோம்.
அன்னை தந்தை மூதாதையர் குணாதிசியங்களை
ஜெனடிக் என்று கூறி
களவாடுகின்றோம்.

தவழும் வயதில்
தாய் மொழியை களவாடுகின்றோம்.
குறும்பு சேட்டைகள் செய்து
சுற்றத்தின்
அன்பை களவாடுகின்றோம்.

பள்ளி செல்கையில்
ஆசானின் அறிவை களவாடுகின்றோம்.
சுற்றம் பார்த்து
சுதந்திரமாகவே – நாகரீகமாக
நாகரீகத்தை களவாடுகின்றோம்.

பூக்களின்
பூரிப்பை பார்வையாலும்
வாசத்தை சுவாசத்தாலும்
களவாடுகின்றோம்.

காற்றின் வருடலுக்கு
காசா கொடுத்தாய்.
சுகத்தை
களவாகத்தானே எடுத்தாய்.

சுகங்கள் அனைத்தையும்
சுதந்திரமான
களவாலேயே அனுபவித்தாய்!...

தண்ணீர்
தன்னை களவு கொடுத்ததாலேயே
நீயும் நானும்
தாகம் தணிந்தோம்.

சூரியன்
ஒளியை களவு கொடுத்ததாலேயே
நீயும் நானும்
தரிசித்துக் கொண்டோம்.

களவை
களவென்று சொல்லாமல்
கற்றுக்கொண்ட பாடமென்றாய்
சோதித்தறிந்த உண்மையென்றாய்.

உன்னை நானும்
என்னை நீயும் களவாடியதை
அன்பென்றோம் காதலென்றோம்.
காதலும் களவுதான்
களவே சுகம்தான்.

ஆம்...
களவாடுவதென்பது சுகமானது தான்
உள்ளங்கள்
ஊனமாகாத வரை...
பொருட்கள்
காணாமல் போகாத வரை...

களவாடுவதென்பது சுகமானது தான்...
யாரையும்
எதையும்
காயப்படுத்தாமல்
களவாடுவதென்பது சுகமானது தான்!...

ஃஃஃ

Saturday, September 16, 2006

ஹைகூ - இலட்சுமணக் கோடுகள் !...

தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.



குடித்தால் கேடு என்றார்
குடித்தால் தான் ஓடுகின்றான்
எந்திரவூர்தி.



இலட்சுமணக் கோடுகள் அல்லவே
தாண்டாமல் இருப்பதற்கு?! – சாலை
நிறுத்தக்கோடுகள்.



மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றது
சிதைந்த உடல்களையும் வாகனங்களையும்
லெவல்கிராசிங்.

ஃஃஃ

Thursday, September 14, 2006

யார் நீ?...

சகியே!...
தென்றலாய் வந்து
இதமாய் கடந்து சென்றாய்.
புயலின் தாக்கத்தை
விட்டுச்செல்கின்றாய்.

வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
மெழுகாய்
ஒளி தந்து கடந்தாய்.
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து செல்கின்றாய்.

ஒற்றை
மலராகவே வந்தாய்
அழகிய
பூந்தோட்டமாய்
நறுமணம் கமழ்கின்றாய்.

எப்படி
என்னுள் நுழைந்தாய்?!...
நானே அறியாத
ஒரு கணத்தில்...

பகல் வானம் போல்
வெருமையாய் இருந்த என்னில்
இரவு வான்
நட்சத்திரங்களாய்
உன் நினைவை
விதைத்து விட்டாய்.

உன்
ஞாபக அலைகள்
சிறு தூறலாக துளிர்த்து
அருவியாய்
ஆர்ப்பரிக்கின்றது.

யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !...
ஃஃஃ

Tuesday, September 12, 2006

பாரதி!...

ஓ...
பாரதி!...
உன்னைப் பற்றி
நான்
என்ன எழுத முடியும்?!

நீ
ஆகாயச் சூரியன்.
நானோ...
மிகச்சிறு மின் மினி!...

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் மட்டுமல்ல
வரும் சந்ததியும்
உன்
கவிதைச்சூட்டில்
குளிர்காய்வோம்.

உன் பெயரையும்
உச்சரிப்போம்…
தமிழ் உச்சரிக்கப்படும் வரை.

Monday, September 11, 2006

மௌனம் வெறுக்கிறேன் !…

சுகந்த மணம் தவழ
மெல்ல
மொட்டவிழும்
மலரின் மௌனம் ரசிப்பேன்.

அலைகள் வீசி ஓய்ந்து
அயர்வாய்
அலைகளின்றி தூங்கும்
நீர்நிலையின் மௌனம் ரசிப்பேன்.

பள்ளி சென்று படித்து – பின்
விளையாடி ஓய்ந்து
என் மேல் கொடியாய்
கால்பரப்பி கண்ணயரும்
என் செல்ல மகளின்
மௌனமான தூக்கம் ரசிப்பேன்.

நீ
சில நேரம்
சிடு சிடுத்து சிணுங்கி – பின்
அமைதியாய்
என் கைகளுக்குள் அடைக்கலமாகும்
மௌன அழகை ரசிப்பேன்.

பகலுக்கு
கருமை பூசி
கண்மூடிக் கிடக்கும்
இரவின்
ஏகாந்த மௌனம் ரசிப்பேன்.

புயலின் அபாயமின்றி
பூப்போல
மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் கைற்றின்
மெல்லிய மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

மௌனம் ரசிக்கும் நானே
என்
மௌனம் வெறுக்கின்றேன்.

உன்னோடு
ஊடல் கொண்டு
நான் மௌனம் காக்கும்
சில மணித்துளிகளில்
நீ
மரணவேதனையை
அனுபவித்த கணங்களை
நான் ரசிக்கவா முடியும்?!...

என்
மௌனம் வெறுக்கின்றேன்
நீ
என்வோடு இருக்கும் போது
மட்டும்!...

Sunday, September 10, 2006

நீ இல்லாத...ஒரு பொழுது...

நேரம் கடந்தது
காலை 08.30 மணியை
அலுவலகம் புறப்படவேண்டும்
இன்னும்
அரை மணியில்.

தேநீர்
தயாரிக்க
பால் காய்த்து முடிப்பதற்குள்
கையில் தீக்காயங்கள்
இரண்டு.

தேயிலைத்தூள்
தேடி எடுப்பதற்குள்
அடுக்களை அலமாரியில்
பாட்டில்களின்
அகரவரிசையோ ஆனது
அலங்கோலம்.

சர்க்கரையென்று
நினைத்து எடுத்தது
உப்பு.
தேநீரில் கலந்திருந்தால்
சுவை ஆகியிருக்கும் கைப்பு.

எல்லாம் முடிந்தபோது
நேரம் கடந்திருந்தது
காலை
09.30- மணியை.

என் தேநீரை
பருகிய வேளைதானுணர்ந்தேன்!...
நான்
குப்பையில் கொட்டென்று சொன்ன
உன் தேநீரின் சுவை
அமிர்தமென்று.

அப்பப்பா!
ஒரு பொழுது
நீ இல்லையென்றால்
இத்தனை சிரமங்களா?!...

உன்னால் மட்டும் எப்படி?

உடம்பு சரியில்லை
சமையலுக்கு
உதவ முடியுமா?
என்றாய்.
பார்க்கலாம் என்றுகூறி
ஒதுங்கிச் சென்றேன்.

காலெல்லாம் வலிக்கின்றது
குழந்தைகளை பள்ளியில்
விட்டுவிட்டுச் செல்ல முடியுமா?
என்றாய்.
அலுவலகத்தில்
வேலை என்றுகூறி
அலட்சியப்படுத்திச் சென்றேன்.

மாலையில்
மருத்துவமனை செல்ல வேண்டும்
விரைவில் வாருங்கள்;
என்றாய்.
நீயே சென்றுவா என்றேன்.

உன்
ஒவ்வொரு முயற்சியிலும்
உணர்வுகளை
காயப்படுத்தியும்
கலங்காதிருக்கின்றாய்.

மாலையில்
விடுதிரும்பியதும்
சூடாய் தேனீர் தந்தாய்.

சோர்ந்து நான்
சோபாவில் சாய்ந்த போது
தலையை
இதமாய் அழுத்திவிட்டு
தலைவலியா?
என்றாய்.

முகச்சோர்வில்
என் நோயறிந்தே
மருத்துவமனை செல்வோமா?
என்றாய்.
மறுத்தபோதும்
தலைவலி தைலம்
தடவிய பின்பே
நிம்மதி கொண்டாய்.

ம்ம்ம்...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
மறக்கவும், மன்னிக்கவும்
சேவை செய்யவும்.

Thursday, September 07, 2006

பாப்பா! பாப்பா! பாரம்மா!...

பாப்பா! பாப்பா! பாரம் மா!
பச்சைப் பசுங்கொடி பாரம்மா.

ஆடும் மயிலை பாரம்மா – நீ
அழகு தமிழில் பாடம்மா.

கூவும் குயிலை பாரம்மா – தினம்
பூப்போல் நீயும் சிரித்திடம்மா.

அழகு அன்னம் பாரம்மா – நீ
அன்பாய் என்றும் பழகிடம்மா.

பச்சை பசுங்கிளி பாரம்மா – அது
உன் பிள்ளைமொழி பேசுதம்மா.

தாவும் கௌரிமான் பாரம்மா – நீ
தன் மானம் காத்திடம்மா.

Monday, September 04, 2006

சின்னக் குழந்தாய்...

சின்னக் குழந்தாய் சின்னக் குழந்தாய்
ஒரு சொல் கேட்டிடம்மா
கதிரவன் எழும் முன்னே – தினம்
நீ காலையில் எழுந்திடம்மா
புரத்தூய்மை பேண நன்றாய் நீயும்
குளிர் நீரில் குளித்திடம்மா
அகத்தூய்மை பேண அனுதினமும்
இறைவனை மனதில் நினைத்திடம்மா.


நொடிப் பொழுதும் தாமதமின்றி – தினம்
பள்ளி சென்று சேர்ந்திடவேண்டும்
நல்ல நண்பர் குழாம் உனைச்சுற்றி
பள்ளியில் நீ அமைத்திட வேண்டும்.
கற்றுத்தரும் ஆசானை ஆண்டவன் போல்
நாளும் மனதில் நினைத்திடவேண்டும்.
கற்ற கல்வி வழிநின்று – தினம்
நி வாழ்வில் உயர்ந்திடவேண்டும்.


வளர்ந்து வரும் உலகில் சிறந்திட
கணினியைக் கற்று தேர்ந்திடவேண்டும்
உலகத்தின் நடப்பை எல்லாம் – நீ
வலைத்தளத்தில் அறிந்திட வேண்டும்
எவ்வுயரம் வளர்ந்திட்ட போதும் – நீ
பழமையை போற்றி பேணிடவேண்டும்
அன்னை தந்தை ஆசான் பேணி
தாய் மொழியை வளர்த்திடவேண்டும்.
******

Friday, September 01, 2006

ஹைகூ-மூன்று

யாரை நோக்கி – இந்த
தலைகிழ் தவம்,
வவ்வால்.



உன்னில் சுத்தம் செய்து
என்னில் அழுக்கை சுமக்கிறேன்,
குளம்.



தன்னில் குறைத்து - தினமும்
என்னில் ஏற்றுவான்,
நாட்காட்டி.