/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Tuesday, September 26, 2006

களவாடுவது சுகமானது?!...

களவாடுவது சுகமானது
உனக்கும் எனக்கும்
நம் அனைவருக்கும்
களவாடுவதென்பது சுகமானது.

எவருமே அறியாமல்
எல்லோருமே களவாடத்தான் செய்கின்றோம்.
ஒப்புக்குச் சப்பாணியாய்
வார்த்தைகளைச் சொல்லி
வளர்ச்சியென்றோ
நாகரீகமென்றோ
திருப்திப்பட்டுக் கொள்கின்றோம்.

களவாடுதலை
கருவிலேயே அரங்கேற்றி வைக்கின்றோம்.
அன்னை தந்தை மூதாதையர் குணாதிசியங்களை
ஜெனடிக் என்று கூறி
களவாடுகின்றோம்.

தவழும் வயதில்
தாய் மொழியை களவாடுகின்றோம்.
குறும்பு சேட்டைகள் செய்து
சுற்றத்தின்
அன்பை களவாடுகின்றோம்.

பள்ளி செல்கையில்
ஆசானின் அறிவை களவாடுகின்றோம்.
சுற்றம் பார்த்து
சுதந்திரமாகவே – நாகரீகமாக
நாகரீகத்தை களவாடுகின்றோம்.

பூக்களின்
பூரிப்பை பார்வையாலும்
வாசத்தை சுவாசத்தாலும்
களவாடுகின்றோம்.

காற்றின் வருடலுக்கு
காசா கொடுத்தாய்.
சுகத்தை
களவாகத்தானே எடுத்தாய்.

சுகங்கள் அனைத்தையும்
சுதந்திரமான
களவாலேயே அனுபவித்தாய்!...

தண்ணீர்
தன்னை களவு கொடுத்ததாலேயே
நீயும் நானும்
தாகம் தணிந்தோம்.

சூரியன்
ஒளியை களவு கொடுத்ததாலேயே
நீயும் நானும்
தரிசித்துக் கொண்டோம்.

களவை
களவென்று சொல்லாமல்
கற்றுக்கொண்ட பாடமென்றாய்
சோதித்தறிந்த உண்மையென்றாய்.

உன்னை நானும்
என்னை நீயும் களவாடியதை
அன்பென்றோம் காதலென்றோம்.
காதலும் களவுதான்
களவே சுகம்தான்.

ஆம்...
களவாடுவதென்பது சுகமானது தான்
உள்ளங்கள்
ஊனமாகாத வரை...
பொருட்கள்
காணாமல் போகாத வரை...

களவாடுவதென்பது சுகமானது தான்...
யாரையும்
எதையும்
காயப்படுத்தாமல்
களவாடுவதென்பது சுகமானது தான்!...

ஃஃஃ

0 Comments:

Post a Comment

<< Home