/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, August 30, 2006

ஹைகூ - ஆறு

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.



தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.


உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.



பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.



புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.



உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

Sunday, August 27, 2006

எங்கள் வீட்டு புதுமலர்.

அதிகாலைப் பொழுதின் ரம்மியம் நீ
வருடும் தொன்றலின் மென்மை நீ
வட்ட நிலவின் குளிர்ச்சி நீ
வெண்மல்லிகைப் பூவின் நறுமணம் நீ.

ரோஜா இதழாய்
உன் கை,
என் விரல் பற்றிடும் போது
மேகக்கூட்டத்தில் மிதக்கின்றேன்.

தாமரையாய்
உன் முகம் மலரும் போது
துன்பம் மறந்து
எல்லைகளற்ற
இன்ப வானில் பறக்கின்றேன்.

முகம் பார்த்து
நீ சிரிக்கும் போது
உலகத்து இசையனைத்தும்
தோற்கும் என்பேன்.

“நீ தவழும் போது
உன் அழகு பார்த்து
ஆண்டாள் கோவில் தேர்
வெட்கம் கொள்ளுமோ?...

நீ மழலைமொழி பேசும் போது
குற்றால அருவி கூட
வாய் பொத்தி நின்று
கொட்குமோ?...

உன் குழந்தை வயது குறும்பு
வெண்ணெய் திருடிய
கண்ணனையும் விஞ்சுமோ?...

வாலிப வயதில்
வஞ்சியர் கூட்டம்
வண்ணத்துப் பூச்சிகளாய்
உனைசுற்றிடுமோ?...

வலிமையில் நீ
காவிய காலத்து
காண்டீபனுக்கு நிகராய்
வருவயோ?

நாளைய பாரதமும்
நீ காட்டும்
நல்வழியைப் பின்பற்றி
வையத்துள்
வல்லரசாய் உயர்திடுமோ?
மனித நேயம் காத்து
சிறந்திடுமோ?”-

இப்போதே
கற்பனையில்
நீர் சுமந்த மேகமாய்
மிதக்கின்றேன்.

எங்கள் வீட்டில்
பூத்திட்ட புது மலரே
என் மருமானே…
உனை
தெய்வமாய் நிற்கின்ற
என் தந்தையின்
புது வடிவாய்ப் பார்க்கின்றேன்.

Wednesday, August 23, 2006

ஆறுதல்.

சுட்டெரிக்கும் வெயில் நாளில்
குடையாய் விரிந்திரிக்கும்
ஆலமர நிழல் ஆறுதல்.

கோடை வெயிலுக்கு இதமாய்
மெல்லத் தூறும்
சிறு தூறல் ஆறுதல்.

கொட்டும் மழை நேரத்தில்
ஒதுங்க இடம் கொடுக்கும்
குடைக்காரர் செயல் ஆறுதல்.

அடிவயிற்றைப் பிசையும் பசி நேரத்தில்
தள்ளுவண்டிக்காரர் விற்கும்
மண்பானை கம்பங்கூள் ஆறுதல்.

பிரச்சனையான தருணத்தில் நமக்காக
அறிமுகமில்லாத அன்னியர் பரிந்து பேசும்
வார்த்தைகள் ஆறுதல்.

வாகன விபத்தில் ரோட்டோரம்
வீழும் நம்மை தூக்கிவிட
நீழும் கைகள் ஆறுதல்.

துயரத்தில் வாடும் போது
மீண்டுவர துணைபுரியும்
நண்பர் குழாம் ஆறுதல்.

ஓய்ந்து சாயும் நேரம்
அப்பா என்றழைத்து குழந்தை செய்யும்
சிறு குறும்பு ஆறுதல்.

துன்பத்தில் துவண்டு போகையில்
தோளோடு தோள் நிற்கும்
சகோதர சகோதரிகள் உறவு ஆறுதல்.

தன்னலன் துறந்து கணவன் நலன்
பேணி நிற்கும்
மனைவி முகம் ஆறுதல்.

மனைவி மக்கள் சுகம் காக்க
தடைகளை தகர்த்தெரியும்
குடும்பத்தலைவன் துணிவு ஆறுதல்.

வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று சொல்லி
தூணாய் தாங்கி நிற்கும்
தந்தை எப்போதும் ஆறுதல்.

இன்பத்திலும் துன்பத்திலும் இழைப்பார
நமக்காய் காத்திருக்கும் அன்னை மடி
எக்காலத்திலும் மானிடருக்கு ஆறுதல்.

Sunday, August 20, 2006

அறிமுகம் செய்துகொள்!…

அறிமுகம்
செய்து கொள்வது நல்லது.
என்னை எனக்கும், உனக்கும்
உன்னை உனக்கும், எனக்கும்
நம்மை நமக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது நல்லது.

என்னை எனக்கும்
உன்னை உனக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது
நம்மை நமக்கே உணர்த்தும்
நம்பிக்கை பிறக்கும்-நாளும்
நம்மை வளர்க்கும்.

என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது
நட்பை வளர்க்கும்-எந்நாளும்
மனிதம் சிறக்கும்.

அதிகாலை
சூரியனோடு
அறிமுகம் செய்து கொள்
நாள் முழுதும் புத்துணர்ச்சி பெருவாய்.

குளிர்நீரோடு
அறிமுகம் செய்து கொண்டு
மூழ்கியெழுந்து பார்
உடலெங்கும் உற்சாகம் கொள்ளும்.

மலரும்
பூ மொட்டுக்களோடு
அறிமுகம் செய்து கொள்
மனம் எல்லாம் மலர்வாய்.

முற்றத்து செடிக்கு
நீர் முகந்து
அறிமுகம் செய்து கொள்
பச்சை பசும் தளிராய்
முகம் மலர்ந்து சிரிக்கும்.

பசித்திருக்கும்
தெருவோர நாய்க்கு
ஒரு கவளம் சோரூட்டி
அறிமுகம் செய்து கொள்
உனை காணும் போது
வாலாட்டி நட்பை சொல்லும்.

தவறுதலாய்
வண்டியில் மோதவரும்
அன்பரையும் திட்டாமல்-ஒரு
புன்னகையை அறிமுகம் செய்
உன் உள்ளம் பூரிக்கும்.

அறிமுகமில்லா
அயலாரைத் தாண்டிச் செல்லும் போதும்
இதழோரம்
ஒரு புன்னகையை பூக்கவிடு.
உன் மனதும்
அவர் மனதும்-நாளெல்லாம்
பூப்போல வாசம் வீசும்.

இரவோடு
அறிமுகம் செய்து கொள்
பயம்விட்டுப் போகும்.

எங்கும்
எப்போதும்
முடிந்த மட்டும் எல்லோரிடமும்
அறிமுகம் செய்து கொள்
உலகுகமே
உன்னை அறிந்து கொள்ளும்.

Friday, August 11, 2006

உன் நினைவுகள்

ஐந்து வயதில்
நாயை கல்லெரிந்தபோது
தவறென்று சுட்டித் திருத்தி
பிற உயிர்மீதும் அன்புகொள்ளச்செய்து
உன் ஜீவகாருண்ய
முகம் காட்டினாய்.

அருவாள் கொண்டு
மரம் வெட்டியபோது
உடல் கிள்ளி
மரத்திற்கும் வலிக்குமென்றாய்.
மரங்களை நட்டு வளர்க்கச் செய்தாய்
பசுமைக்கு தோழனானாய்.

பாதையில் கிடந்த
முள் விலக்காது நடந்த போது
அதை நீயே விலக்கிவிட்டு
இனிவரும் காலம்
அதைச்செய்ய அறிவு தந்தாய்
எதிரிக்கும் நன்மை செய்யச்சொல்லி
மனிதம் வளர்த்தாய்.

இரட்டை வனவாசங்களை
அரேபியாவில் கழித்த போதும்
பாலைவனத்திலும் - என்றும்
உன் பெயர் சொல்ல
சோலைவனத்தை
உருவாக்கிவிட்டே வந்தாய்.

அப்பா!...
அறுபதாண்டுகளுக்கு முன்
காணியாறு விளையில்
நீ வைத்த மரங்கள்
சந்ததிகளுக்கும்
உன் பெயர் சொல்லும்...

நீ
பாறையில் செதுக்கிய
உன் பெயர் போலவே...
உன் நினைவுகளும் - என்று
ம்எங்களோடு நிலையாக.

Thursday, August 10, 2006

இதய தெய்வத்திற்கு 15-ம் நாள் நினைவஞ்சலி

கடந்த 26.07.2006-ம் தேதி இப்பூ உலகைவிட்டு பிரிந்த என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்