/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, June 28, 2006

விதவை

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.

பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.

விண்மீன் இல்லாத
இரவு வானம்.

பல்லவி எழுதாத
இசைப் பாடல்.

பெண்ணே!
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.

வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.

மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.

செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.

விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.

ஏன்
நீ மட்டும் தனிமரமாய்?!.

Wednesday, June 21, 2006

எனை பிரியாதிரு

என் இனியவனே!
உனக்காக,
என்
பட்டண வாழ்கை துறந்து,
பட்டிக்காட்டு மருமகளானேன்.

உனக்காக,
என்
ஹைடெக் கனவுகளைத் துறந்து,
கட்டுப்பாடுகளை
மாலையாக சூடிக்கெண்டேன்.

உன்
அன்பில் திழைத்து
என் தேவைகள் மறந்தும் துறந்தும்,
உன் தேவைகளை
எனதாக்கிக்கொண்டேன்.

நான்
உன் அன்பில் கட்டுண்ட
கூட்டுப்புழு.
உன் காதல் வெளிச்சத்தை வட்டமிடும்
விட்டில் பூச்சி.
உன் நவ குணங்களில் - உன்
அன்பை மட்டுமே
பெரிதாய் எண்ணும் அன்னப்பறவை.

நான்
உன் நடைபயணத்தில்
செருப்பாய்.
உன் மகிழ்ச்சியில்
சிரிப்பாய்.
உன் சோகத்தில்
ஆறுதலாய்.
உன் கழைப்பில்
தாகம் தணிக்கும் தண்ணீராய்

இருக்கவே விரும்புகிறேன்.

நீ
தாயாய் அன்பைத் தந்தாய்,
சேயாய் பாசம் பெற்றாய்,
நண்பனாய் உன்னுணர்வு பகிர்ந்தாய்,
எங்கணம் என்னுணர்வு
அறியாமல் போனாய்?!!!

எனக்கு
உனை பிரிந்த கணம்-
ஒரு யுகம்.
உனை தழுவாத தென்றல்-
அணல் காற்று.

நீ
அருகில் இல்லாத போது
பால்நிலா - அது
எனை சுட்டெரிக்கும் சூரியன்.
மொத்தத்தில்
நீ
அருகில் இல்லாத நாள்-அது
நான்
வாழாத நாள்.


என்னவனே!
எனக்காக வாழும் நீ,
இனியாவது
எனை பிரியாமலும் இருக்க பழகு!!
இல்லையேல்...
உன் பிரிவு தாங்கும்
யுக்தியாவது கற்றுத்தா!!!

Tuesday, June 20, 2006

தேன்கூடு-போட்டி: வளர் சிதை மாற்றம்.

அண்ட வெளியில்
நீண்ட நெடும்
கோடி ஆண்டுக்கு முன்
சூரியனின் சிதைவு
இன்று
பூ உலகாய்.

அக்கினிக் குழம்புத்துண்டின்
நீண்ட நெடும் குளிர்வு
இன்று
பூமியில்
காற்றாய், நீராய், மலையாய்.

நீரோடையில்
ஓடி இழைத்த கற்கள்
மண்துகளாய்.

உயிரின் தோற்றம்
ஒரு செல் அமீபா.
வளர் சிதை மாற்றத்தின்
மையில் கல்லாய்
மனிதன்.

கற்பாறையில் ஆரம்பித்த
சரித்திரம்
இன்று கணினியில்.

சங்ககால மங்கைக்கு
காதல் தூதர்
அன்னப் பறவை, மயில்.
தற்கால மங்கைக்கு
செல்பேசி, குறுச்செய்தி, மின்னஞ்சல்.

சென்ற தலைமுறை
சிறுவனின் வாகனம்
குறும்பல் வண்டி.
இன்றைய சிறுவனுக்கோ
பாட்டரி கார்கள்.

பயணத்தில் பாதை மாறலாம்
பயணிக்கும் வாகனமும் மாறலாம்
இலக்குகள் ஒன்றே.

பருகும் பானங்கள் மாறலாம்
பாத்திறமும் மாறலாம்
தாகம் ஒன்றே.

உண்ணும் உணவு வேறாகலாம்
உட்கொள்ளும் விதம் வேறாகலாம்
பசி ஒன்றே.

பாறை
கொத்தனின் பார்வையில் படியானது.
சிற்பியின் பார்வையில் தெய்வமானது.

உருவங்கள் மாறும்
உருவகங்கள் மாறும்
மாற்றம் மட்டுமே
எப்போதும் மாறாத தேற்றம்.

மாற்றம் என்பது வளர்ச்சி
அதுவே மானிடத்தின் உயர்ச்சி.

Sunday, June 18, 2006

விடியலின் குரல்

உண்ணப்பட்ட விதைகள் எல்லாம்
மாண்டு போவதில்லை.
எச்சங்களாய் வெளிப்பட்டும்
முளைவிடுவோம்.

எங்கள்
கிளைகள் வெட்டப்படுவதால்
நாங்கள் காய்ந்து போவதில்லை
பல கிளையாய் துளிர் விடுவோம்.

சருகுகளாய்
எங்கள் உணர்வுகளை
மண்ணில் புதைத்தாலும்
உரமாய்
மற்றோர் உயிர்க்கு
ஊக்கம் தருவோம்.

பாறைகளை உடைப்பது போல்
எங்களை சிதைத்தாலும்
நாங்கள் அழிவதில்லை
துகள்களாய் எங்கும் வியாபிப்போம்.

தணலிடை இட்டு
எங்களை பொசுக்கிடிலும்
சாம்பலாய் உயிர்த்தெழுவோம்.

மாலைப்பொழுதின் இருளாய்
துஷ்டர்கள்
எங்களை துயர்படுத்திடினும்
நாளைய விடியலில்
ஆதவனாய் எழுவோம்.

Saturday, June 17, 2006

உற்ற நண்பன்

என்
வரவிற்காக வாசலில்
தினமும் காத்திருப்பான்.

வழிப்பயணத்தில்
பாதம் முத்தமிட்டு நடப்பான்.
கற்களும் முற்களும்
கழிவுகளும் தாங்கி சகித்திருப்பான்.

தான்
தேய்ந்த போதும்
நான் நோகாது
காத்து நிற்பான்.

தெய்வம்
தொழச்சென்றால்
நான் புண்ணியம் பெற
வாயிலில் தவம் இருப்பான்.

நான்
விழித்திருக்கும் வேளையெல்லாம்
எனக்காய் உழைதத
என் பாத அணியே!
நான் துயில்கையில்
உனை
யார் கவர்ந்து சென்றார்?

பாத அணி
தொலைந்து போனால்
நல்ல சகுணமாம்.
சேதி கேட்ட
அத்தை சொன்னார்.

சகுணம் பணம் பற்றி
நினைக்கத்தோன்ற வில்லை.
உன் இழப்பில்
மனதில் ஏதோ நெருடல்.

எங்கிருப்பினும்
உன் பணி
சிறப்புறச்செய் நண்பனே!
------------------------------------------------------------------------------------------------
மும்பையிலிருந்து 13.06.06 அன்று இரயிலில் ஊர் திரும்பும் போது யாரோ ஒரு முகம் தெரியாத அன்பர் என் பாத அணியை கவர்ந்து சென்றுவிட்டார். அதன் தாக்கத்தில் எழுதியது.
------------------------------------------------------------------------------------------------

ஒரு தலை காதல்

என்
பார்வை
உன் பார்வையை
தரிசித்த போது
பூக்களின் மகரந்தச்சேர்கையாய்
காதலை உணர்ந்தேன்.

நீ
என்னுடன் பேசிய
முதல் பேச்சின் பின் தான்
கருவுற்ற தாய் போல்
என்னுள்
நம்
காதல் கரு வைத்தேன்.

நாம்
பேசிக்கழித்த கணத்தில் தான்
என்னுள்
நம்
காதல் கருவும் வளர்ந்தது.

இறுதியில்
நாம் பேசிப்பழகியது
நட்பென்றாய்.

பெண்ணின்
பொய் கற்பம் போல்
என்
காதலும் ஒருதலையா?

------------------------------------------------------
14.08.2003-ல் இருக்கன்குடியில் வைத்து எழுதியது.
------------------------------------------------------

Friday, June 16, 2006

நான் நானாக இல்லை

என்னவளே!
உனக்கு தெரியுமா
நீ
தொட்டுத்தராத
பூவின் வாசம்
என் சுவாசத்திற்கு தெரிவதே இல்லை.

உன்
எச்சில் படாத நீர்
என் தாகம் தணிப்பதே இல்லை.

நீ
பிசைந்து தராத சாதம்
என் பசியைக் குறைப்பதே இல்லை.

நீ
வராத பயணத்தில்
நான்
சென்றடையும் தூரம் குறைவதே இல்லை.

நீ
அருகில் இல்லாத போது
நான்
நானாகவே இல்லை.
* * * * *

Thursday, June 15, 2006

உணர்வுகளால் பிரியாமல் இருக்க...

நீ
பார்த்த முதல் பார்வையில்
என்னில் தோன்றிய
மின்னல் பொறியை சேமிக்கின்றேன்.

உன்
முதல் பரிசத்தில்
மயிர்க்கால்கள் குத்திட்ட சிலிர்ப்பை
என்னில் சேமிக்கிறேன்.

நீ
என்னோடு பேசிய
முதல் வார்த்தையை
கவிதையாய்
என்னில் சேமிக்கிறேன்.

நீ
செல்லமாய் சண்டையிட
நான் மௌனியாய் இருந்த போது
உன்னில் ஏற்பட்ட
ஏக்கத்தை சேமிக்கிறேன்.

என்னவளே!
நீயே என்னோடு இருக்கும் போது
இது ஏன் என வினவுகின்றாய்?!

உனை பிரிய நேரும்
ஓரிரு நாளும்
உணர்வுகளால் பிரியாதிருக்கவே
உன் அசைவுகளை
நான் சேமிக்கிறேன்.
* * * * *

நான்... நீ

நான்....நீ
நான்
நீல வானம்.
நீ என்னில்
பகலில் சூரியன்
இரவில் குளிர் நிலா.

நான்
ஆழ்ந்த அலை கடல்.
நீ என்னில்
வெளிப்பரப்பில் காதல் அலை.
உள் மனதில்
நீந்தி குதூகலிக்கும் வண்ண மீன்.

நான்
அழகிய மரம்.
நீ என்னில்
கண்ணுக்குத்தெரியாத ஆணிவேர்
கண்டுகளிகக அழகிய பூ.

நான்
கம்பீரமான மலை.
நீ என்னில்
அழகிய பசுமரக்காடு
எழில் நீரோடை

நான்
வரண்ட பாலைவனம்.
நீ என்னில்
வெயிலில் கானல் நீர்
காற்றில் பாலைவனப் புயல்.

நான்....நீ
எப்போதும் இணைந்தே
நாம்.

காற்று

பவுர்ணமி நிலவு கண்டு
நான்
சந்தோசித்து இருந்ததால்
மெல்ல இதமாய் தவழ்ந்து வந்தேன்.
மனிதன் என்னை
இனிய தென்றல் என்றான்.

அவன்
வார்த்தையில் குளிர்ந்த நான்
விடியலின் போது
இன்னும் குளிர்ச்சியாய் வீசினேன்
நடுங்கிப்போன மனிதன்
என்னை
ச்ச...வாடைக்காற்று
வாட்டுகின்றதே என்றான்.

மனிதனின்
சலிப்பைப்பார்த்து வருந்தி
பகலின் போது
அமைதியாய் இருந்தேன்
வெயிலின் வெம்மை தாங்காது
இப்போதும் மனிதன்
ச்ச... காற்றே இல்லை என்று
சலித்துக்கொண்டான்.

அவன்
சலிப்பைப் பார்த்து
வெயிலின் வெம்மை தணிக்க
சற்று பலமாய் வீசினேன்.
இப்போதும்
கேசம் கலைந்த மனிதன்
ச்சே... இழவு காற்று
பேய் போல் வீசுகின்றதே என்று
திட்டித்தீர்த்தான்.

வருந்திய பெண்
தாய் வீடு செல்வது போல்
கலங்கிய நான்
கடலைப்பார்த்துச் சென்றேன்
இயற்கையின் சுழற்சியால்
புயலாய் மாறி
மீண்டும்
மனிதனிடம் வந்தேன்.
அந்தோ!
என் சீற்றம் தாழாமல்
அவனோ வீடிழந்தும்
உற்றார் உறவினர் இழந்தும்
சிலர் எனை சுவாசிக்க மறந்தும்!

சீண்டாதே எனை.
மனிதா!
உனக்கு எல்லாம் நானே.

* * * * *

சுதந்திரம்

விதையின்
கவசம் உடைத்து
தளிர் துளிர் விடுவது இரவில்.

நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி
நம்மை களிப்பூட்டுவதும் இரவில்.

பால் நிலா
நீலவான் தோன்றி
காதல் வளர்த்ததும் இரவில்.

காதல் பரிசாய்
சிசு பிறக்க
உறவுகள் வளர்வதும் இரவில்.

எம் முந்தையர்
அடிமை விலங்கொடித்து
சுதந்திரம் மலர்ந்ததும் இரவில்.

இரவில்
துளிர்த்த
விதை மரமானது.

இரவில்
பூத்த
விண்மீன்களால் இன்புற்றாய்.

இரவின்
நிலவில்
காதல் வளர்த்தாய்.

இரவின்
உறவில் பிறந்தவன் மனிதனானாய்.


ஏன்
இரவில் பெற்ற
சுதந்திரத்தை மட்டும்
விடியவே இல்லை என
பழிக்கின்றாய்?

சுதந்திரம்
உன்னிடம் தான் இருக்கின்றது.

நீந்தத்தெரியாத
மீன்கள் இல்லை.
ஏன்
நீ மட்டும்
சுதந்திரத்தை சுவாசிக்கத்தெரியாமல்?!

பறவை பறப்பதற்கு
யாரும் கற்றுத்தருவதில்லை.
உனக்கு மட்டும்
சுதந்திரத்தை சுவாசிக்க
சொல்லித்தர வேண்டுமா?

நீ
நிழலிலேயே
வாழ்ந்து கொண்டு
வெழளிச்சப் புள்ளியை
வெயில் என்கின்றாய்.

ஒற்றை
மர நிழலில் ஒதுங்கும்
ஏர்பிடிக்கும் உழவனைக்கேள்
நிழலின் அருமையும்
வெயிலின் கொடுமையும்
சொல்வான்.

ஆம்
அடிமை தேசத்தில் வாழ்ந்த
உன்
முன்னவனைக் கேள்
முடியாத போது
அவர் தம் வரலாற்றைப் படி.
எப்போதோ
விடிந்துவிட்ட சுதந்திரம்
இப்போதாவது
உன் கண்களுக்கு புலப்படும்.
* * * * *

Wednesday, June 14, 2006

கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருக்கிறாய் அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேரொருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்.